Fri. Dec 9th, 2022

போதை என்பது எல்லா காலகட்டத்திலும் இருந்திருக்கின்றது. அந்த அந்த காலத்திற்கு ஏற்ப அந்த அந்த சூழலுக்கு ஏற்ப அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாறி வருகின்றனர். ஆனால் தற்போதுள்ள இந்தியாவில் ஏழ்மை, அறியாமை, கல்வியின்மை எல்லாவற்றையும் தாண்டி போதை பொருள் தான் தற்போதுள்ள பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவை போதை பழக்கம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பது தான் இப்போதிருக்கும் இந்தியர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். 

இப்படி போதை பழக்கத்திற்கு அடிமைகளாகி மீண்டு வர முடியாமல் சிக்கி தவிக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிடாமல் அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். 

இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.

எல்லா குழந்தையும் தானாக தேடி சென்று போதை பழக்கத்திற்கு அடிமைகள் ஆவதில்லை ஒன்றாக படிக்கும் மாணவர்கள், நண்பர்களின் தூண்டுதல்களால் பெரும்பாலானவர்கள் போதை பொருள்களை உபயோகப்படுத்த ஆரமித்து அதற்கு அடிமைகள் ஆகி விடுகின்றனர். அதேபோல கவலையை மறக்க குடி ஒரு மருந்து என்ற தவறான கருத்து இருந்து வருகிறது. இதனை காரணமாக சுட்டிக்காட்டியே பலர் குடிக்கின்றனர்.  பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். 

ஆனால் அது உண்மை கிடையாது. போதை தெளிந்த சில நிமிடங்களிலேயே உண்மை நிதர்சனமாக நம் கண்ணுக்கு எதிராக வந்து நிற்கும். போதை என்பது சில நொடிகள் தான் நம்மை ஆட்கொள்ளும் ஆனால் நம்மால் என்றும் உண்மை வாழ்க்கையில் இருந்து தப்பிக்க முடியாது. மனஅழுத்தம் மற்றும் கவலைகளை போதை பழக்கம் என்றும் தீர்க்காது. 

இந்த போதை பழக்கம் அதிகமாக வீட்டில் இருந்தும் தொடங்க வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு முன்னுதாரணம். அவர்களே பிள்ளைகளை தவறான வழியில் செலுத்தும் கருவியாக மாறிவிட கூடாது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அது அவர்களை தவறான பாதையில் செல்லாமல் காப்பாற்றும். 

மேலும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுடன் இருந்த அந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் வெளிவர தேவையான ஆதரவு அளிக்க வேண்டும்.  

குடும்பம், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை மீட்பது கட்டாயம் ஆனது. அவர்களை அப்படியே விட்டுவிட்டால் அவர்கள் மீது எடுக்க முடியாத தூரம் சென்றுவிடுவார்கள். மேலும் அவர்களை ஒரேடியாக இழக்கவும் நேரிடும். எனவே இந்த குழந்தைகளை சிரமப்பட்டு மீட்டெடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.